மத்தேயு 22

திருமண விருந்து உவமை

' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ' நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் ' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள் ' என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.

அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ' தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்? ' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.

அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ' அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். '

முதன்மையான கட்டளை

அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ' போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ' என்று கேட்டார்.

அவர், ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. ' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

' உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக ' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன ' என்று பதிலளித்தார்.

தாவீதின் மகன் பற்றிய உவமை

பரிசேயர் ஒன்றுகூடி வந்தபோது இயேசுவும் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார். அவர், ' மெசியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்? ' என்று கேட்டார். அவர்கள், ' தாவீதின் மகன் ' என்று பதிலளித்தார்கள்.

இயேசு அவர்களிடம், ' அப்படியானால் தாவீது தூய ஆவியின் தூண்டுதலால் அவரைத் தலைவர் என அழைப்பது எப்படி? ' ஆண்டவர் என் தலைவரிடம், ' நான் உம் பகைவரை உமக்கு அடிபணிய வைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்! ' என்று உரைத்தார் என அவரே கூறியுள்ளார் அல்லவா!

எனவே தாவீது அவரைத் தலைவர் என அழைப்பதால் அவர் அவருக்கே மகனாய் இருப்பது எப்படி? ' என்று கேட்டார். அதற்கு எவரும் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகக் கூற இயலவில்லை. அந்நாள் முதல் அவரிடம் எவரும் எதுவும் கேட்கத் துணியவில்லை.

மத்தேயு 22:2-14, 35-46