சீராக் 34, 36 & 37

மதியீனர் வெறுமையான பொய்யான நம்பிக்கை கொண்டுள்ளனர். கனவுகள் அறிவிலிகளுக்குப் பறக்க இறக்கைகள் தருகின்றன. கனவுகளைப் பொருட்படுத்துவோர் நிழலைப் பிடிக்க முயல்வோர்போலும், காற்றைத் துரத்துவோர்போலும் ஆவர். கண்ணாடியில் தெரியும் முகம் வெளும் தோற்றமே: கனவுகளில் தோன்றுவதும் அவ்வாறே.

அநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது: நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல. இறைப்பற்றில்லாதோரின் காணிக்கைகளை உன்னத இறைவன் விரும்புவதில்லை: ஏராளமான பலி செலுத்தியதற்காக அவர் ஒருவருடைய பாவங்களை மன்னிப்பதில்லை. ஏழைகளின் உடைமையிலிருந்து பலி செலுத்துவது தந்தையின் கண்முன்னே மகனைக் கொலை செய்வதற்கு இணையாகும்.

எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்: அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள். அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பது அவர்களைக் கொல்வதாகும்: கூலியாளின் கூலியைப் பறிப்போர் அவர்களது குருதியையே சிந்துகின்றனர்.

ஒருவர் மன்றாடுகளில் மற்றொருவர் சபித்தால் யாருடைய குரலை ஆண்டவர் கேட்பார்? பிணத்தைத் தொட்டவர் குளித்தபின் மீண்டும் அதைத் தொடுவாராயின், அவர் குளித்ததால் பயன் என்ன? தங்கள் பாவங்களுக்காக நோன்பிருப்போர் வெளியில் சென்று, மீண்டும் அதே பாவங்களைச் செய்தால், யார் அவர்களது வேண்டுதலைக் கேட்பர்? அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?

சீராக் 34:1-3, 18-22, 24-26

ஒரு பெண் எந்த ஆணையும் கணவனாக ஏற்றுக்கொள்வாள்: ஆனால், ஆணுக்கு ஒரு பெண்ணைவிட மற்றொருத்தி மேம்பட்டவளாகத் தோன்றுவான். பெண்ணின் அழகு அவளுடைய கணவனை மகிழ்விக்கும்: அவன் வேறு எதையும் அவ்வளவு விரும்புவதில்லை. அவளது பேச்சில் இரக்கமும் கனிவும் இருக்குமானால் அவளுடைய கணவன் மற்ற மனிதர்களைவிட நற்பேறு உடையவன்.

மனைவியை அடைகிறவன் உடைமையைப் பெறுகிறான்: தனக்கு ஏற்ற துணையையும் ஆதரவு தரும் தூணையும் அடைகிறான். வேலி இல்லையேல் உடைமை கொள்ளையடிக்கப்படும்: மனைவி இல்லையேல் மனிதன் பெருமூச்சு விட்டு அலைவான். நகர்விட்டு நகருக்குத் தப்பியோடும் திறமையான திருடனை யாரே நம்புவர்? அவ்வாறே, தங்குவதற்கு இடம் இல்லாமல், இரவு வந்ததும் கண்ட இடத்திலும் தங்கும் மனிதனை எவர் நம்புவர்?

சீராக் 36:21-27

எண்ணமே செயலின் தொடக்கம்: திட்டமிடல் எல்லாச் செயலாக்கத்திற்கும் முன்செல்கிறது. மனமாற்றத்தின் அடையாளம் நான்கு வகைகளில் வெளிப்படும்: அவை நன்மை தீமை, வாழ்வு சாவு: இவற்றை இடைவிடாது ஆண்டு நடத்துவது நாவே.

குழந்தாய், உன் வாழ்நாளில் உன்னையே சோதித்துப்பார்: உனக்கு எது தீயது எனக் கவனி: அதற்கு இடம் கொடாதே. எல்லாமே எல்லாருக்கும் நன்மை பயப்பதில்லை: எல்லாரும் எல்லாவற்றிலும் இன்பம் காண்பதில்லை: எவ்வகை இன்பத்திலும் எல்லை மீறிச் செல்லாதே: நீ உண்பவற்றின் மீது மிகுந்த ஆவல் கொள்ளாதே. மிகுதியாக உண்பதால் நோய் உண்டாகிறது: பேருண்டி குமட்டலைக் கொடுக்கிறது. பேருண்டியால் பலர் மாண்டனர்: அளவோடு உண்போர் நெடுநாள் வாழ்வர்.

சீராக் 37:16-18, 27-31