சீராக் 31, 32 & 33

பலர் நடுவே நீ பந்தியில் அமர்ந்திருக்கும்போது மற்றவருக்குமுன் நீ உண்ணத்தொடங்காதே. நற்பயிற்சி பெற்றோருக்கு சிறிது உணவே போதுமானது: படுத்திருக்கும்போது அவர்கள் அரும்பாடுபட்டு மூச்சுவிடமாட்டார்கள்.

அளவோடு உண்பதால் ஆழ்ந்த உறக்கம் வருகிறது: அவர்கள் வைகறையில் துயில் எழுகிறார்கள்: உயிரோட்டம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். தூக்கமின்மை, குமட்டல், கடும் வயிற்றுவலி ஆகியவை அளவின்றி உண்பவருக்கு உண்டாகும். மிகுதியாக உண்ணுமாறு நீ கட்டாயப்படுத்தப்பட்டால், இடையில் எழுந்துபோய் வாந்தியெடு: அது உனக்கு நலம் பயக்கும்.

திராட்சை இரசம் அருந்துவதால் உன் ஆற்றலைக் காட்டமுயலாதே: திராட்சை இரசம் பலரை அழித்திருக்கிறது.

திராட்சை இரசத்தை அளவோடு குடிக்கின்றபோது அது மனிதருக்கு வாழ்வை அளிக்கின்றது. திராட்சை இரசம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை! மானிடரின் மகிழ்வுக்காக அது படைக்கப்பட்டது. உரிய நேரத்தில் அளவோடு அருந்தப்படும் திராட்சை இரசம் உள்ளத்திற்கு இன்பத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் அளிக்கிறது.

அளவுக்குமீறி அருந்தப்படும் திராட்சை இரசம் சினத்தையும் பூசலையும் தூண்டிவிடுகிறது: மனக் கசப்பையும் விளைவிக்கிறது. அறிவிலிகள் தங்களுக்கே கேடுவிளைக்கும்படி குடிவெறி அவர்களின் சீற்றத்தைத் தூண்டிவிடுகிறது: அவர்களின் வலிமையைக் குறைக்கிறது: அவர்கள் காயம்பட நேரிடுகிறது.

திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தில் உனக்கு அடுத்திருப்பவரைக் கடிந்துக்கொள்ளாதே: அவர்கள் மகிழ்ந்திருக்கும்போது அவர்களை இகழாதே: அவர்களைப் பழித்துப் பேசாதே: கடனைத் திருப்பிக்கேட்டு அவர்களைத் தொல்லைப்படுத்தாதே.

சீராக் 31:18-21, 25, 27-31

இசை ஒலிக்கும் இடத்தில் மிகுதியாகப் பேசாதீர்: பொருந்தா வேளையில் உம் ஞானத்தை வெளிப்படுத்தாதீர்.

இளைஞனே, தேவைப்பட்டால் பேசு: அரிதாக, அதுவும் இரு முறை வினவப்பெற்றால் மட்டும் பேசு. சுருக்கமாய்ப் பேசு: கறைவான சொற்களில் நிறைய சொல்: அறிந்திருந்தும் அமைதியாக இரு. பெரியார்கள் நடுவின் உன்னை அவர்களுக்கு இணையாக்கிக் கொள்ளாதே: அடுத்தவர் பேசும்போது உளறிக்கொண்டிராதே.

எண்ணிப் பாராது எதையும் செய்யாதே: செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே: ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே. தடங்கலற்ற வழியை நம்பாதே. உன் பிள்ளைகளிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றிக்கொள். உன் செயல்கள் அனைத்திலும் உன்னையே நம்பு: இவ்வாறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பாய்.

சீராக் 32:4, 7-9, 19-23

உன் மகனையோ மனைவியையோ, சகோதரரையோ நண்பரையோ உன் வாழ்நாளில் உன்மேல் அதிகாரம் செலுத்த விடாதே: உன் செல்வங்களை மற்றவர்களுக்குக் கொடாதே. இல்லையேல் நீ மனவருத்தப்பட்டு அவற்றைத் திருப்பிக் கேட்கக்கூடும். உன்னிடம் உயிர் உள்ளவரை, மூச்சு இருக்கும்வரை, மற்றவர்கள் உன்மீது அதிகாரம் செலுத்த விடாதே.

நீ உன் பிள்ளைகள் கையை எதிர்பார்த்திருப்பதைவிட உன் பிள்ளைகள் உன்னிடம் கேட்பதே மேல். உன்னுடைய எல்லாச் செயல்களிலும் சிறந்தோங்கு: உன் புகழுக்கு இழுக்கு வருவிக்காதே. உன் வாழ்நாளை நீ முடிக்கும் அந்நாளில், அந்த இறுதி நேரத்தில், உன் உரிமைச்சொத்தைப் பகிர்ந்துகொடு.

சீராக் 33:20-24