எசேக்கியேல் 22 & 33

உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்: அன்னியரைத் துன்புறுத்தித் தந்தையற்றோதரையும் கைம்பெண்களையும் இழிவாய் நடத்தினார்கள். நீயோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து, ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய்.

புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர். அவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர். உன்னிடையே முறைகேடானதைச் செய்கின்றனர். தங்கள் தந்தையின் திறந்த மேனியை வெளிப்படுத்துகிறவர்களும் தீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னிடையே உள்ளனர்.

ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான். வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான். உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர். நீ வட்டி வாங்குகிறாய், கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி, அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய். நீ என்னை மறந்துவிட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும் நீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும் நான் என் கைகளைத் தட்டுவேன். நான் உன்னைத் தண்டிக்கும் நாளில் உன் மனவுறுதி நிலைத்திருக்குமா? அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா? ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன். நான் இதைச் செய்தே தீர்வேன்.

எசேக்கியேல் 22:7-14

அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று: ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?

மேலும், மானிடா! உன் மக்களிடம் சொல்: நேர்மையாளர் தவறிழைக்கும்போது, அவர்களுடைய நற்செயல்கள் அவர்களை விடுவிக்கா. தீயோரோ தம் தீமையினின்று மனம் மாறிவிட்டால், தம் தீமையை முன்னிட்டு வீழ்ச்சியடையார். நேர்மையாளர் தவறிழைக்கும்போது தம் முன்னைய நற்செயல்களை முன்னிட்டு வாழமுடியாது.

நேர்மையாளரிடம் அவர்கள் உறுதியாக வாழ்வது உறுதி என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் முன்னைய நற்செயல்களை நம்பித் தவறிழைத்தால், அவர்களுடைய நற்செயல்களில் எதுவுமே எண்ணப்படமாட்டாது. அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர்.

மாறாக, தீயோரிடம் நீங்கள் சாவது உறுதி என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் பாவத்தினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்- அவர்கள் தாங்கள் வாங்கிய பணயப் பொருள்களைத் திருப்பிக் கொடுத்தால், திருடிக் கவர்ந்தவற்றைத் திருப்பித் தந்தால், வாழ்வளிக்கும் நியமங்களின்படி நடந்து, தீச்செயல் எதுவும் செய்யாதிருந்தால்-அவர்கள் வாழ்வது உறுதி: சாகார்.

அவர்கள் செய்த பாவம் எதுவுமே அவர்களுக்கெதிராக எண்ணப்படமாட்டாது. நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்வது உறுதி.

நேர்மையாளர் தம் நன்னெறியினின்று பிறழ்ந்து தவறிழைத்தால் அதன்பொருட்டு அவர்கள் சாவர். தீயோரும் தம் தீமையினின்று விலகி நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அதன்பொருட்டு அவர்கள் வாழ்வர்.

எசேக்கியேல் 33:11-16, 18-19