தோபித்து 4, 12 & 13

அதனால், மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு: உன் இனத்தவரின் புதல்வர் புதல்வியரான உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன்மூலம் உன் உள்ளத்தில் செருக்குக்கொள்ளாதே: இத்தகைய செருக்கு அழிவையும் பெருங் குழப்பத்தையும் உருவாக்கும்: சோம்பல் சீர்கேட்டையும் கடும் வறுமையையும் உண்டாக்கும்; சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம்.

வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு: இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே. நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும். மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.

உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. அளவு மீறி மது அருந்தாதே: குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.

உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு: உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.

உன் உணவை நீதிமான்களின் கல்லறையில் வைத்துப் பரிமாறு: பாவிகளுடன் அதைப் பங்கிட்டுக் கொள்ளாதே.

ஞானிகளிடம் அறிவுரை கேள்: பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.

எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று: உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு: ஏனெனில் வேற்றினத்தார் எவருக்கும் அறிவுரை கிடையாது. ஆண்டவர் நல்ல அறிவுரை வழங்குகிறார். ஆண்டவர் விரும்பினால் மனிதரைப் பாதாளம்வரை தாழ்த்துகிறார். மகனே, இப்பொழுது இக்கட்டளைகளை நினைவில்கொள்; அவை உன் உள்ளத்தினின்று நீங்காதிருக்கட்டும்.

தோபித்து 4:13-19

மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்: தீமை உங்களை அணுகாது.

அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தை விட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது.

தருமம் சாவினின்ற காப்பாற்றும்: எல்லாப் பருவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்.

பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.

தோபித்து 12:7-10

அவர் தமது பெருமையை உங்களுக்குக் காட்டியுள்ளார். எல்லா உயிர்கள்முன்னும் அவரை ஏத்துங்கள். ஏனெனில் அவர் நம் ஆண்டவர்: நம் கடவுள்: நம் தந்தை: எக்காலத்துக்கும் அவர் கடவுள்.

உங்களுடைய நெறிகெட்ட செயல்களுக்காக அவர் உங்களைத் தண்டிப்பார்: நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உங்களை ஒன்றுகூட்டி உங்கள் அனைவர்மீதும் இரக்கத்தைப் பொழிவார்.

நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார்.

உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப்பாருங்கள்: நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்: வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள்.

தோபித்து 13:4-7