சீராக் 14

நாவினால் தவறு செய்யாதோர் பேறுபெற்றோர்: அவர்கள் பாவங்களுக்கான மன உறுத்தல் இல்லாதவர்கள். தம் மனச்சான்றால் கண்டிக்கப்படாதோர் பேறுபெற்றோர்: நம்பிக்கை தளராதோரும் பேறு பெற்றோர். கஞ்சனுக்குச் செல்வம் ஏற்றதல்ல: கருமிக்க அதனால் என்ன பயன்? தமக்கெனச் செலவிடாமல் சேர்த்து வைக்கும் செல்வம் பிறரையே சென்று அடையும்? அச்செல்வத்தால் பிறரே வளமுடன் வாழ்வர்.

தங்களையே கடுமையாக நடத்துவோர் அடுத்தவருக்கு எங்ஙனம் நன்மை செய்வர்? அவர்கள் தங்களிடம் உள்ள செல்வங்களையே துய்த்து மகிழத் தெரியாதவர்கள். தமக்குத்தாமே கருமியாய் இருப்போரைவிடக் கொடியவர் இலர்: அவர்களது கஞ்சத்தனத்துக்கு இதுவே தண்டனை. அவர்கள் நன்மை செய்தாலும் அது அவர்களை அறியாமல் நிகழ்கின்றது: இறுதியில் தங்கள் கஞ்சத்தனத்தையே காட்டி விடுவர்.

குழந்தாய், உள்ளத்தைக் கொண்டு உன்னையே பேணிக்கொள்: ஆண்டவருக்கு ஏற்ற காணிக்கை செலுத்து. இறப்பு யாருக்கும் காலம் தாழ்த்தாது என்பதையும் நீ சாகவேண்டிய நேரம் உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள். நீ இறக்குமுன் உன் நண்பர்களுக்கு உதவி செய்: உன்னால் முடிந்தவரை தாராளமாகக் கொடு. ஒவ்வொரு நாளும் உனக்குக் கிடைக்கும் நன்மைகளை நன்கு பயன்படுத்து: உன் வாழ்வின் இன்பங்களைத் துய்க்காமல் விட்டுவிடாதே.

உன் உழைப்பின் பயனைப் பிறருக்கு விட்டுவிடுவதில்லையா? நீ உழைத்துச் சேர்த்ததைப் பங்கிட்டுக்கொள்ள விடுவதில்லையா? கொடுத்து வாங்கு: மகிழ்ந்திரு. பாதாளத்தில் இன்பத்தைத் தேட முடியாது. ஆடைபோன்று மனிதர் அனைவரும் முதுமை அடைகின்றனர்: நீ திண்ணமாய்ச் சாவாய் என்பதே தொன்னை நெறிமுறை. இலை அடர்ந்த மரத்தின் சில இலைகள் உதிர்கின்றன: சில இலைகள் தளிர்க்கின்றன. ஊனும் உதிரமும் கொண்ட மனித இனத்திலும் சிலர் இறப்பர்: சிலர் பிறப்பர். கை வேலைப்பாடுகளெல்லாம் மட்கி மறையும்: அவற்றைச் செய்தோரும் அவற்றோடு மறைந்தொழிவர்.

சீராக் 14:1-7, 11-19