மத்தேயு 10

அஞ்சாதீர்கள்

'அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்

' மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

பிளவு ஏற்படுதல்

' நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.

ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

கைம்மாறு பெறுதல்

' உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.

இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.

இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '

மத்தேயு 10:26-42