மத்தேயு 21

நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் ' என்று கூறினார்.

இரு புதல்வர்கள் உவமை

மேலும் இயேசு, ' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.

அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.

இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை ' என்றார்.

கொடிய குத்தகைக்காரர் உவமை

″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள்.

எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மத்தேயு 21:22, 28-41, 43