சீராக் 7

தீமை செய்யாதே: தீமை ஒருபோதும் உனக்கு நேராது. அநீதியை விட்டு அகன்று செல்: அநீதியும் உன்னைவிட்டு விலகும். குழந்தாய், அநீதி எனும் நிலத்தில் விதைக்காதே: அப்போது அதில் நீர் ஏழு மடங்கு விளைச்சலை அறுக்கமாட்டாய்.

செய்த பாவத்தையே மீண்டும் செய்யாதே: அவற்றுள் ஒன்றாவது உனக்குத் தண்டனை பெற்றுத் தரும்.

கசப்புணர்வு கொண்டோரை எள்ளிநகையாடாதே: நம்மைத் தாழ்த்தவும் உயர்த்தவும் வல்லவர் ஒருவர் உள்ளார். பொய் புனைந்து உன் உடன்பிறப்பை ஏமாற்றாதே: உன் நண்பர்க்கும் அவ்வாறே செய்யாதே. பொய் சொல்ல விரும்பாதே: பொய் பேசும் பழக்கம் நன்மை தராது.

பாவிகளின் கூட்டத்தோடு சேராதே: கடவுளின் சினம் காலம் தாழ்த்தாது வெளிப்படும் என்பதை மறவாதே. பணிவையே பெரிதும் நாடு: இறைப்பற்றில்லாதவர்களுக்கு நெருப்பும் புழுக்களும் தண்டனையாகக் கிடைக்கும்.

ஞானமுள்ள நல்ல மனைவியை இழந்துவிடாதே: அவளது நன்னயம் பொன்னைவிட உயர்ந்தது.

உனக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நற்பயற்சி அளி: இளமைமுதலே பணிந்திருக்கச் செய்.

உனக்குப் பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களது கற்பில் அக்கறை காட்டு: அவர்களுக்கு மிகுதியாகச் செல்லம் கொடுக்காதே. உன் மகளுக்குத் திருமணம் செய்துவை: உன் தலையாய கடமையைச் செய்தவன் ஆவாய். அறிவுக்கூர்மை படைத்தவருக்கே உன் மகளை மணமுடித்துக்கொடு.

உன் உள்ளத்திற்கு ஏற்ற மனைவி உனக்கு இருந்தால் அவளைத் தள்ளி வைக்காதே: நீ வெறுக்கும் மனைவியை நம்பிவிடாதே. உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட: உன் தாயின் பேறுகாலத் துன்பத்தை மறவாதே. அவர்கள் உன்னைப் பெற்றெடுத்தார்கள்: அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து.

ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு: இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும்: உயிர் வாழ்வோர் அனைவருக்கும் கனிவோடு கொடு: உயிர் நீத்தோர்க்கும் அன்பு காட்ட மறவாதே. அழுவோரைத் தவிர்க்காதே: புலம்புவோரோடு புலம்பு.

நோயாளிகளைச் சந்திக்கத் தயங்காதே: இத்தகைய செயல் மற்றவர்களின் அன்பினை உனக்குப் பெற்றுத் தரும். எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்: அவ்வாறேனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய்.

சீராக் 7:1-3, 8, 11-13, 16-17, 19, 23-28, 32-36