முகவுரை

அன்பர்களே, இந்த திருவிவிலிய நன்னெறிகள் என்பதின் நோக்கம் இன்றைய விவிலிய வாசகர்களுக்கு திருவிவிலியத்தில் உள்ள நல்லக் கருத்துக்களையும் நல்லொழுக்க நெறிகளையும் முழுமையாக அறியச் செய்வதேயாகும்.

திருவிவிலியம் என்பது ஒரு வரலாற்று நூலோ அல்லது அறிவியல் நூலோ அல்ல. இது விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற இறைமக்களின் விசுவாச வாழ்வை உள்ளடக்கிய, பிரதிபலிக்கின்ற, விசுவாசத்தில் வாழ வழி காட்டுகின்ற நூலாகும்.

இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல்காரணம் இறைவனே ஆவார். கடவுள் மனிதனிடம் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது; ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான்; ஆயினும் கடவுள் மனிதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.

இதை ஒரு நூல் என்பதை விட நூலகம் என்றே கூறிவிடலாம் ஏனென்றால் விவிலியம் என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல் தொகுப்பு. திருவிவிலியமானது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

பழைய ஏற்பாடு என்பது பல நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் உருவாக்கப்பட்ட பல நுல்களின் தொகுப்பாகும். இறைவனின் ஆவியால் தூண்டப்பட்டவர்கள் அவற்றை எழுதினார்கள். பழைய ஏற்பாடானது கடவுள் எவ்வாறு இஸ்ரேயல் மக்களை அன்பு செய்து வழி நடத்தி தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி மீட்பளித்தார் என்பதை விளக்கிக் கூறுகிறது. இறைவன் மனிதனுக்கு வாழ்வுகொடுத்துக் காப்பாற்றியதையும், இறைவனை விட்டு அலைந்து திரிந்து, தங்களையே இழந்தவர்களாய்த் தோல்வியடைந்தவர்களைப் பற்றியும் சாட்சியம் கூறுகிறது. மேலும் இதில் திருப்பாடல்கள், நீதிமொழிகள், ஞானாகமம், சீராக் போன்ற நூல்கள் நல்ல கருத்துக்களையும், நல்ல நெறிகளையும் எடுத்துரைப்பதாக விளங்குகிறது.

புதிய ஏற்பாடு என்பது இயேசு கிறிஸ்துவின் காலத்தையும் பின்னர் உள்ள காலக்கட்டத்தையும் எடுத்துரைக்கின்றது. ஒப்பற்ற தன்னிகரில்லாத முறையில் இறைவன் தம்மையே தம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படு்த்துகின்றார். இயேசுவின் போதனையில் சிறப்பான அம்சம் இறையரசின் செய்தியே. மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பல்வேறு போதனைகள், சிந்தனைகள், செயல்கள் மனிதருக்கு எவ்வாறு மீட்பைக் கொண்டு வந்தன என்பதையும் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இதில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்ற சுவிசேசங்கள், இயேசு கிறிஸ்து தான் மெசியா என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன.