எசாயா 44, 45 & 46

சிலை செதுக்குவோர் அனைவரும் வீணரே: அவர்கள் பெரிதாக மதிப்பவை பயனற்றவை: அவர்களின் சான்றுகள் பார்வையற்றவை: அறிவற்றவை: எனவே அவர்கள் மானக்கேடு அடைவர். எதற்கும் உதவாத தெய்வச் சிலையை எவனாவது செதுக்குவானா? வார்ப்பானா? இதோ, அவனும் அவன் நண்பர்களும் வெட்கக்கேடு அடைவர்: அந்தக் கைவினைஞர் அனைவரும் மனிதர்தாமே! அவர்கள் அனைவரும் கூடிவந்து எம்முன் நிற்கட்டும்: அவர்கள் திகிலடைந்து ஒருங்கே வெட்கக்கேடுறுவர்.

கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்: அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்: தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்: ஆற்றலை இழக்கிறான்: நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான். தச்சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்: அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.

அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்: அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்: அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம். அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது: அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.

அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்: அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்: இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்: பின்னர் குளிர் காய்ந்து, வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ! என்று சொல்லிக் கொள்கிறான். எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும் என்று மன்றாடுகிறான்.

அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர். அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை: அவர்களுக்கு அறிவுமில்லை: அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்: அதன் நெருப்புத்தணலில் அப்பம் சுட்டேன்: இறைச்சியைப் பொரித்து உண்டேன்: எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா? என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.

அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது: ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன: அவனால் தன்னை மீட்க இயலாது, தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.

எசாயா 44:9-20

தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய் என்றும் அவன் வனைந்தது அவனிடம், உனக்குக் கைத்திறனே இல்லை என்றும் கூறுவதுண்டோ? தந்தையிடம், நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர் என்றும், தாயிடம், நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய் என்றும் வினவுபவனுக்கு ஐயோ கேடு!

எசாயா 45:9-10

உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்: நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்: உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்: நானே உங்களைச் சுமப்பேன்: நானே விடுவிப்பேன். யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்? யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்? யாருக்கு நிகராக என்னை ஒப்பிடுவீர்கள்?

மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்: தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்: பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்: அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்: பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள். அதைத் தூக்கித் தோள்மேல் சுமந்து போகின்றனர்: அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்: அது அங்கேயே நிற்கிறது: தன் இடத்திலிருந்து அது பெயராது: எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது: அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை.

எசாயா 46:4-7