ஞானாகமம் 7, 9 & 11

ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.

ஞானாகமம் 7:28

கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை: நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.

மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்?

நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்: ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.

ஞானாகமம் 9:13-18

ஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் என்பதை இதனால் அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.

நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர். படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!

உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்: ஏனெனில் அவை யாவும் உம்முடையன.

ஞானாகமம் 11:16, 23-26