சீராக் 1

ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு: அது தன் கனிகளால் மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.

ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் ஆணிவேர்: அதன் கிளைகள் நீடிய வாழ்நாள்கள். (ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டிவிடுகிறது. அது இருக்கும்போது சினத்தையெல்லாம் அகற்றிவிடுகிறது.) நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது: சினத்தால் நிலை தடுமாறுவோர் வீழ்ச்சி அடைவர்.

பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்: பின்னர், மகிழ்ச்சி அவாகளுள் ஊற்றெடுத்துப் பாயும். அவர்கள் தக்க நேரம்வரை நா காப்பார்கள். பலருடைய வாய் அவர்களது அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும். ஞானத்தின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு: பாவிகளுக்கு இறைப்பற்று அருவருப்பைத் தரும்.

ஞானத்தை நீ அடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி: அப்போது ஆண்டவரே உனக்கு ஞானத்தை வாரி வழங்குவார். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானமும் நற்பயிற்சியுமாகும். பற்றுறுதியும் பணிவும் அவருக்கு மகிழ்ச்சி தரும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணியாதே: பிளவுபட்ட உள்ளத்தோடு அவரிடம் செல்லாதே.

மனிதர்முன் வெளிவேடம் போட வேண்டாம். நாவடக்கம் கொள். நீ வீழ்ச்சியுறாதவாறு செருக்குக் கொள்ளாதே. உன்மீதே மானக்கேட்டை வருவித்துக்கொள்ளாதே. ஆண்டவருக்கு நீ ஆஞ்சி நடவாததாலும் உன் உள்ளத்தில் கள்ளம் நிறைந்திருந்ததாலும் ஆண்டவர் உன் மறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார்: சபையார் எல்லார் முன்னிலையில் உன்னைத் தாழ்த்துவார்.

சீராக் 1:16, 20-30