ஞானாகமம் 5

நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில் நாம் மனமுவந்து நடந்தோம்: பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்: ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்! இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மை என்ன? இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின: புரளி போல விரைந்து சென்றன.

அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது. அது சென்ற தடத்தை யாரும் காண முடியாது: அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை. பறவை காற்றில் பறந்து செல்கிறது. அது சென்ற வழியின் அடையாளமே தெரிவதில்லை. அது சிறகடித்துச் செல்லும்போது மென்காற்றின்மீது மோதுகிறது: அது பறந்தோடும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கிறது: இறக்கைகளை அசைத்துக் காற்றை ஊடுருவிச் செல்கிறது. பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.

இலக்கை நோக்கி எய்த அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. பிளவுண்ட காற்று உடனே கூடிவிடுகிறது. ஆனால் அம்பு சென்ற வழியை ஒருவரும் அறிவதில்லை.

இவற்றைப் போன்றதே நம் நிலையும்! நாம் பிறந்தோம்: உடனே இறந்துபட்டோம். பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம் நற்பண்பின் அடையாளம் எதுவுமில்லை. நம்முடைய தீமையால் நம்மையே அழித்துக்கொண்டோம்.

இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை காற்றில் அடித்துச் செல்லும் பதர்போன்றது: புயலால் சிதறடிக்கப்படும் உறைபனிபோன்றது: காற்றால் அங்கும் இங்கும் கலைக்கப்படும் புகைபோன்றது: ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின் நினைவுபோல் அது மறக்கப்படும்.

நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களைப்பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு. அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்: ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள். அவர் தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார்: தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.

ஞானாகமம் 5:7-16