சீராக் 15, 16 & 17

ஆண்டவரே என் வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்லாதே: தாம் வெறுப்பதை அவர் செய்வதில்லை. அவரே என்னை நெறிபிறழச் செய்தார் எனக் கூறாதே: பாவிகள் அவருக்குத் தேவையில்லை. ஆண்டவர் அருவருப்புக்குரிய அனைத்தையும் வெறுக்கிறார்: அவருக்கு அஞ்சிநடப்போர் அவற்றை விரும்புவதில்லை. அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினர்: தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார்.

நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி: பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்: உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

சீராக் 15:11-17

பயனற்ற பிள்ளைகள் பலரைப் பெற ஏங்காதே: இறைப்பற்றில்லாத மக்கள் பற்றி மகிழ்ச்சி கொள்ளாதே. அவர்கள் பலராய் இருப்பினும் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் அவர்களிடம் இல்லையெனில் அவர்களால் மகிழ்ச்சி அடையாதே.

அவர்களின் நீடிய வாழ்வில் நம்பிக்கை வைக்காதே: அவர்களுடைய எண்ணிக்கையை நம்பியிராதே. ஓராயிரம் பிள்ளைகளைவிட ஒரே பிள்ளை சிறந்ததாய் இருக்கலாம்: இறைப்பற்றில்லாத பிள்ளைகளைப் பெறுவதைவிடப் பிள்ளையின்றி இறப்பது நலம்.

அறிவுக்கூர்மை படைத்த ஒருவர் ஒரு நகரையே மக்களால் நிரப்பக்கூடும்: ஒழுக்க வரம்பு அற்றோரின் ஒரு குலம் அதைச் சுடுகாடாக மாற்ற இயலும்.

சீராக் 16:1-4

வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்: ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்? உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை: உடல் நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.

சீராக் 17:27-28