திருப்பாடல்கள் 1, 24 & 36

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்: இகழ்வாரின் குழுவினில் அமராதவர்: ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்: அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்: அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்: பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்: தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.

ஆனால், பொல்லார் அப்படி இல்லை: அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்: பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார். நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்: பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

திருப்பாடல்கள் 1:1-6

ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர், இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.

திருப்பாடல்கள் 24:3-5

பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது: அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர்.

அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை: நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர். படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்: தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.

திருப்பாடல்கள் 36:1-4