சீராக் 4

குழந்தாய், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே: கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே. பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே: வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே. உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே: வறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்.

துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே: ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிகொள்ளாதே. உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே: உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே. ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார்.

மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு: பெரியோர்களுக்குத் தலை வணங்கு. ஏழைகளுக்குச் செவிசாய்: அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல். ஒடுக்குவோரின் கையினின்று ஒடுக்கப்பட்டோரை விடுவி: நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு.

கைவிடப்பட்டோர்க்குத் தந்தையாய் இரு: அவர்களின் அன்னையர்க்குத் துணைவன்போல் இரு. அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்: தாயைவிட அவர் உன்மீது அன்புகூர்வார்.

தக்கநேரம் பார்: தீமையைக்குறித்து விழிப்பாயிரு: உன்னைப்பற்றியே நாணம் அடையாதே. ஒரு வகை நாணம் பாவத்திற்கு இட்டுச்செல்லும்: மற்றொரு வகை நாணம் மாட்சியையும் அருளையும் தரும். பாகுபாடு காட்டி உனக்கே கேடு வருவித்துக் கொள்ளாதே: பணிவின் பெயரால் வீழ்ச்சி அடையாதே.

பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்துவிடாதே. ஞானம் பேச்சில் புலப்படும்: நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும். உண்மைக்கு மாறாகப் பேசாதே: உன் அறியாமைக்காக நாணம் கொள்.

உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே: ஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்யமுயலாதே. மூடருக்கு அடிபணியாதே: வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே. இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு: கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார். பேச்சில் துடுக்காய் இராதே: செயலில் சோம்பலாகவும் ஈடுபாடின்றியும் இராதே.

வீட்டில் சிங்கம்போல் இராதே: பணியாளர்முன் கோழையாய் இராதே. பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே: கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக்கொள்ளாதே.

சீராக் 4:1-10, 20-31