முகவுரை

அன்பர்களே, இந்த திருவிவிலிய நன்னெறிகள் என்பதின் நோக்கம் இன்றைய விவிலிய வாசகர்களுக்கு திருவிவிலியத்தில் உள்ள நல்லக் கருத்துக்களையும் நல்லொழுக்க நெறிகளையும் முழுமையாக அறியச் செய்வதேயாகும்.

திருவிவிலியம் என்பது ஒரு வரலாற்று நூலோ அல்லது அறிவியல் நூலோ அல்ல. இது விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற இறைமக்களின் விசுவாச வாழ்வை உள்ளடக்கிய, பிரதிபலிக்கின்ற, விசுவாசத்தில் வாழ வழி காட்டுகின்ற நூலாகும்.

இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல்காரணம் இறைவனே ஆவார். கடவுள் மனிதனிடம் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது; ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான்; ஆயினும் கடவுள் மனிதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.

இதை ஒரு நூல் என்பதை விட நூலகம் என்றே கூறிவிடலாம் ஏனென்றால் விவிலியம் என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல் தொகுப்பு. திருவிவிலியமானது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

பழைய ஏற்பாடு என்பது பல நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் உருவாக்கப்பட்ட பல நுல்களின் தொகுப்பாகும். இறைவனின் ஆவியால் தூண்டப்பட்டவர்கள் அவற்றை எழுதினார்கள். பழைய ஏற்பாடானது கடவுள் எவ்வாறு இஸ்ரேயல் மக்களை அன்பு செய்து வழி நடத்தி தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி மீட்பளித்தார் என்பதை விளக்கிக் கூறுகிறது. இறைவன் மனிதனுக்கு வாழ்வுகொடுத்துக் காப்பாற்றியதையும், இறைவனை விட்டு அலைந்து திரிந்து, தங்களையே இழந்தவர்களாய்த் தோல்வியடைந்தவர்களைப் பற்றியும் சாட்சியம் கூறுகிறது. மேலும் இதில் திருப்பாடல்கள், நீதிமொழிகள், ஞானாகமம், சீராக் போன்ற நூல்கள் நல்ல கருத்துக்களையும், நல்ல நெறிகளையும் எடுத்துரைப்பதாக விளங்குகிறது.

புதிய ஏற்பாடு என்பது இயேசு கிறிஸ்துவின் காலத்தையும் பின்னர் உள்ள காலக்கட்டத்தையும் எடுத்துரைக்கின்றது. ஒப்பற்ற தன்னிகரில்லாத முறையில் இறைவன் தம்மையே தம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படு்த்துகின்றார். இயேசுவின் போதனையில் சிறப்பான அம்சம் இறையரசின் செய்தியே. மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பல்வேறு போதனைகள், சிந்தனைகள், செயல்கள் மனிதருக்கு எவ்வாறு மீட்பைக் கொண்டு வந்தன என்பதையும் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இதில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்ற சுவிசேசங்கள், இயேசு கிறிஸ்து தான் மெசியா என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன.

பத்துக் கட்டளைகள்

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.

மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.

உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.  ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.

கொலை செய்யாதே.

விபசாரம் செய்யாதே.

களவு செய்யாதே.

பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.

பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

விடுதலைப்பயணம் 20:1-17

விடுதலைப் பயணம் 15, 20 & 21

மேலும் அவர், ″உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்″ என்றார்.

விடுதலைப் பயணம் 15:26

என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.

மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.

கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

விடுதலைப் பயணம் 20:3-17

தம் தந்தையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

ஆனால் கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்: சூட்டுக்குச் சூடு: காயத்துக்கு காயம்: கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.

விடுதலைப் பயணம் 21:15, 17, 23-25

விடுதலைப் பயணம் 22, 23 & 31

சூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே. விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும். ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும்.

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.

விடுதலைப் பயணம் 22:18-20, 22-23, 25

பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம். கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்! எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.

உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு. உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.

உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே. தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன். கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.

விடுதலைப் பயணம் 23:1-8

ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய சாபாத்து . ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

விடுதலைப் பயணம் 31:14-15

லேவியர் 18

உங்களுள் எவரும் தமக்கு இரத்த உறவாயிருக்கும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொள்ள வேண்டாம்: நானே ஆண்டவர்! தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில் அவள் உன் தாய்: உன் தாயை வெற்றுடம்பாக்காதே! தந்தையின் மற்ற மனைவியரை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் தந்தையின் உடல் ஆவர்!

தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளான உன் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! உன் மகனின் மகளையோ உன் மகளின் மகளையோ வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் வெற்றுடம்பு ஆவர். உன் தந்தைக்கு அவனுடைய மனைவியிடம் பிறந்த மகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உனக்கு சகோதரி.

தந்தையின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தந்தையின் உடல். தாயின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தாயின் உடல். தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்காதே! அவன் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம்: ஏனெனில் அவள் உன் சிற்றன்னை.

மருமகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில் அவள் உன் மகனின் மனைவி: அவளை வெற்றுடம்பாக்காதே! சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில் அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு. ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே. இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர். அது முறைகேடு

மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே! மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே! உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே.

பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு. எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம். அது முறைகேடான அருவருப்பு.

லேவியர் 18:6-20, 22-23

லேவியர் 19

களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்: வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது.

காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள்.

பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்! என் கட்டளைகளைக் கடைப்பிடி. உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே. உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே!

எந்த இறைச்சியையும் குருதியோடு உண்ண வேண்டாம்: குறி பார்க்க வேண்டாம்: நாள் பார்க்க வேண்டாம். தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம். செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்: பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்: நானே ஆண்டவர்!

நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே! ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்தைக் குறித்து அச்சம் கொள்ளுங்கள்: நானே ஆண்டவர்!

பில்லி சூனியம் பார்க்க வேண்டாம்: குறிகாரரை அணுகவேண்டாம்: அவர்களைத் தேடி அவர்களால் தீட்டாக வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட: உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்: நானே ஆண்டவர்!

லேவியர் 19:11-19, 26-32

லேவியர் 20

குறிசொல்வோரையும், மைபோடுவோரையும் பின்பற்றி வழி தவறியோரை எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவர்களை அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன். எனவே நீங்கள் உங்களைப் புனிதப்படுத்தி, தூயவர் ஆகுங்கள். ஏனெனில், நான் உங்கள் கடவுள்!

கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நானே உங்களைத் தூய்மைப்படுத்தும் ஆண்டவர்! தம் தந்தையையும் தாயையும் சபிக்கும் எவரும் கொலை செய்யப்பட வேண்டும். தம் தந்தையையும் தாயையும் சபிப்பவரின் குருதிப்பழி அவர்மேலேயே இருக்கும்.

அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும். தன் தந்தையின் மனைவியோடு உடலுறவு கொள்பவன் தன் தந்தையை வெற்றுடம்பாக்கினான். எனவே இருவரும் கொலை செய்யப்படுவர். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும் .

ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும். பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு. இருவரும் கொல்லப்பட வேண்டும். இருவரின் குருதிப்பழியும் அவர்கள் மேலேயே இருக்கும்.

ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். விலங்கோடு ஒருவன் புணர்ந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அந்த விலங்கையும் கொல்ல வேண்டும். ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும்.

யாரேனும் ஒருவன் தன் தந்தைக்கு, அல்லது தாய்க்குப் பிறந்த மகளோடு அதாவது அவன் சகோதரியோடு உடலுறவு கொண்டால், அவளும் அதற்கு இணங்கினால் அது வெட்கக்கேடான செயல். அவர்கள் தங்கள் இனத்தோரின் முன்னிலையில் அழிக்கப்படுவார்கள். தன் சகோதரியை வெற்றுடம்பாக்கிய அவன் தன் தீவினையைச் சுமப்பான்.

மாதவிலக்கில் இருக்கும் ஒருத்தியுடன் ஒருவன் உடலுறவுக் கொண்டால், இருவரும் தங்கள் உதிர ஊற்றைத் திறந்ததால் அவர்கள் தங்கள் இனத்தாரிடையே இல்லாதபடி அழிக்கப்படுவார்கள். தாயின் சகோதரியையோ, உன் தந்தையின் சகோதரியையோ வெற்றுடம்பாக்காதே. மீறுபவர் தங்கள் உடலை இழிவுபடுத்தியதால் தங்கள் பழியைத் தாமே சுமப்பர்.

ஒருவன் தன் தந்தையின் சகோதரனின் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்கினான். எனவே, அவர்கள் தங்கள் பாவத்தைத்தாமே சுமப்பர்: பிள்ளையன்றி இறப்பர். ஒருவன் தன் சகோதரன் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் சகோதரனை வெற்றுடம்பாக்குகிறான். எனவே, அவர்கள் பிள்ளையன்றி இருப்பர்.

குறிசொல்லும் அல்லது மைபோட்டுப் பார்க்கும் எந்த ஆணும் பெண்ணும் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும் .

லேவியர் 20:6-21, 27

லேவியர் 24, 25 & 26

மனிதரைக் கொல்பவர் கொலை செய்யப்படுவார். விலங்குகளைக் கொல்பவர் விலங்குக்கு விலங்கு திரும்பக் கொடுக்க வேண்டும். தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும். முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்: இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும்.

விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்: மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும். அயலாருக்கும், நாட்டினருக்கும், ஒரேவிதமான நியாயம் வழங்கவேண்டும். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

லேவியர் 24:17-22

சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அன்னியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும். அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட: உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும். அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே: உணவை அதிக விலைக்கு விற்காதே.

லேவியர் 25:35-37

நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

லேவியர் 26:1

இணைச் சட்டம் 4, 5, 6, 23 & 24

நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள். ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள், தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.

மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார்.

இணைச் சட்டம் 4:16-19

தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.

கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

இணைச் சட்டம் 5:16-21

முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச் சட்டம் 6:5

இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே. வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே.

இணைச் சட்டம் 23:19-20

பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

இணைச் சட்டம் 24:16

1 சாமுவேல் 15

அப்பொது சாமுவேல் கூறியது: "ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது!

கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலை வழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரசப் பதவியினின்று நீக்கிவிட்டார்".

1 சாமுவேல் 15:22-23

யோபு 35

நீர் பாவம் செய்தால், அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்? நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால் அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்? நீர் நேர்மையாய் இருப்பதால் இவருக்கு நீர் அளிப்பதென்ன? அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன? உம் கொடுமை உம்மைப்போன்ற மனிதரைக் துன்புறுத்துகின்றது: உம் நேர்மையும் மானிடர்க்கே நன்மை பயக்கின்றது.

யோபு 35:6-8

திருப்பாடல்கள் 1, 24 & 36

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்: இகழ்வாரின் குழுவினில் அமராதவர்: ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்: அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்: அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்: பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்: தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.

ஆனால், பொல்லார் அப்படி இல்லை: அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்: பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார். நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்: பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

திருப்பாடல்கள் 1:1-6

ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர், இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.

திருப்பாடல்கள் 24:3-5

பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது: அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர்.

அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை: நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர். படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்: தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.

திருப்பாடல்கள் 36:1-4

திருப்பாடல்கள் 41 & 49

எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்: துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.

ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்: நெடுங்காலம் வாழவைப்பார்: நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்: எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார்.

படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்: நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்.

திருப்பாடல்கள் 41:1-3

தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது: தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது. மனித உயிரின் ஈட்டுத்தொகை மிகப் பெரியது: எவராலும் அதனைச் செலுத்த இயலாது.

ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.

கல்லறைகளே! அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை. ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது: அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார். தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே: தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே.

பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்: சாவே அவர்களின் மேய்ப்பன்: அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்: அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்: பாதாளமே அவர்களது குடியிருப்பு. ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி: பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார்.

சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை: அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.

உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், 'நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்: ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது: அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்.

திருப்பாடல்கள் 49:6-20

நீதிமொழிகள் 1, 2 & 3

பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்: நீ அவர்களுடன் போக இணங்காதே. அவர்கள் என்னைப் பார்த்து, எங்களோடு வா: பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்: யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்: பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்: படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம். எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்: கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம். நீ எங்களோடு சேர்ந்துகொள்: எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே: அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே. அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன: இரத்தம் சிந்த விரைகின்றன. பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள். அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்: அவர்கள் அளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும். தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே: அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.

நீதிமொழிகள் 1:10-19

ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும். அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்: தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள். அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது: அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன. அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை: வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை.

நீதிமொழிகள் 2:16-19

உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே. அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, 'போய் வா, நாளைக்குத் தருகிறேன்' என்று சொல்லாதே. அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே: அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?

ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே. வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே: அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே. ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்: நேர்மையாளரோடு அவா உறவுகொள்கின்றார். பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்: அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.

செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்: ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்: அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

நீதிமொழிகள் 3:27-35

நீதிமொழிகள் 5

விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்: அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை. ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்: இருபுறமும் கூரான வால் வெட்டுதலை ஒக்கும் அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்: அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும். வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை: அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்: அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.

ஆகையால், பிள்ளாய்! எனக்குச் செவிகொடு: நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே. அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்: அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே. இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்: கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய். அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்: நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும். நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்: உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.

உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு. அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்: அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக! மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? புரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?

மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை: அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார். பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்: தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர். கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்: தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.

நீதிமொழிகள் 5:3-11, 18-23

நீதிமொழிகள் 6

சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்: அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்: அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை. எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்: அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.

சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்? இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள். வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்: ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.

ஆண்டவர் வெறுக்கும் ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது. அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை, சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால், பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

கட்டளை என்பது ஒரு விளக்கு: அறிவுரை என்பது ஒளி: கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி. அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும். உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே: அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே. விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்: ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.

ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா? ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா? பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே: அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான். அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்: அவனது இழிவு ஒருபோதும் மறையாது. ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்: பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்: சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்: எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.

நீதிமொழிகள் 6:6-11, 16-19, 23-29, 32-35

நீதிமொழிகள் 24 & 30

ஞானிகளின் வேறு சில முதுமொழிகள்: நீதித்தீர்ப்பு வழங்கும்போது ஓர வஞ்சனை காட்டுவது நேரியதல்ல. குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்: உலகனைத்தும் வெறுக்கும். ஆனால், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் நீதிபதிக்கு நலமுண்டாகும்: நற்பேறும் கிடைக்கும்.

நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார். வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்: வயலை உழுது பண்படுத்து: பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.

தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே: உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே. அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்: அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன் என்று சொல்லாதே.

சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்: அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன். அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது: நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது: அதன் சுவர் இடிந்து கிடந்தது.

அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்: அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே: இன்னும் சிறிது நேரம் தூங்கு: இன்னும் சிறிது நேரம் உறங்கு: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு. அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்: ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.

நீதிமொழிகள் 24:23-34

கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது: தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே: கூட்டினால் நீ பொய்யனாவாய்: அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.

தகப்பனை ஏளனம் செய்யும் கண்களையும் வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.

நீதிமொழிகள் 30:5-6, 17

நீதிமொழிகள் 31

அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது: அது அரசருக்கு அடுத்ததன்று: வெறியூட்டும் மதுவை ஆட்சியாளர் அருந்தலாகாது. அருந்தினால், சட்டத்தை மறந்து விடுவார்கள்: துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.

ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு: மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு. அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்: தங்கள் துன்பத்தை நினையாதிருக்கட்டும்.

பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு: திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு. அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு: எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.

திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது: அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்: அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்: ஒரு நாளும் தீங்கு நினையாள்.

தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்: அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.

எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்: மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.

அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்: வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள். அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்: அன்போடு அநிவரை கூறுவாள். தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்: உணவுக்காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பியிருக்கமாட்டாள்.

அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என் வாழ்த்துவார்கள்: அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான். திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு: அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே என்று அவன் சொல்வான்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்: அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

நீதிமொழிகள் 31:4-12, 18, 20, 23, 25-31

சாலமோனின் நீதிமொழிகள் 10

ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்: அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.

தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது: நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்.

வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்: விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்: அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.

நேர்மையாளர்மீது ஆசி பொழியும்: பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்: பொல்லாரின் பெயரோ அழிவுறும்.

ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்: பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்: கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.

தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்: பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்: பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்: தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.

விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்: மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.

ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்: மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.

செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்: ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.

நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்: பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.

நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்: கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.

உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யார்: வசைமொழி கூறுவோர் மடையர்.

மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்: தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.

நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்: பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.

நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்: செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.

ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்: அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.

தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு: ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.

பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்: கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.

சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்: கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.

பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்: பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.

நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்: பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.

ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்: தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது: பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்: வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்: பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.

நீதிமொழிகள் 10:1-32

சாலமோனின் நீதிமொழிகள் 11

கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது: முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.

இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே: தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.

நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்: நம்பிக்கைத் துரோகிகளின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.

கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது: நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்: பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.

நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்: நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.

பொல்லார் எதிர்நோக்குயிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்: அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்: பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.

இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்: நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப்பெறுவர்.

நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்: பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.

நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்: பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.

அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்: நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு:

வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவர்: நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.

திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்: அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.

அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்: பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.

கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்: முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.

இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்: இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.

பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல: நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.

நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்: தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.

வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்: மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.

தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்: இது உறுதி: கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.

மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்: எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.

அளவின்றிச் செலவழிப்போர் செல்வராவதும் உண்டு: கஞ்சராய் வாழ்ந்து வறியவராவதும் உண்டு.

ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்: குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.

தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்: தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.

நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்: தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.

தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்: கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.

குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காதவர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே: அத்தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமையாவர்.

நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்: ஆனால், வன்செயல் உயிராற்றலை இழக்கச் செய்யும்.

நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!

நீதிமொழிகள் 11:1-31

சாலமோனின் நீதிமொழிகள் 12

அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்: கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.

நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.

பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை: நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது.

பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்: இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.

நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை: பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.

பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்: நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.

பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்றலின்றி அழிவர்: நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.

மனிதர் தம் விவேத்திற்கேற்ற புகழைப் பெறுவர்: சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.

வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.

நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.

உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்: வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.

தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.

தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்: நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்: வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.

மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்: ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.

மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்: விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார்.

உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்: பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்: ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.

ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்: பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.

சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்: பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.

நல்லாருக்கு ஒரு கேடும் வராது: பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.

பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்: உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்.

விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்: மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.

ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்: சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.

மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்: இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.

சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்: பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.

சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்: விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.

நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்: முரணானவரின் வழி சாவில் தள்ளும்.

நீதிமொழிகள் 12:1-28

சாலமோனின் நீதிமொழிகள் 13

ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்: இருமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.

நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்: வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.

நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்: நாவைக் காவாதவன் கெட்டழிவான்.

சோம்பேறிகள் உண்ண விரும்பகிறார்கள், உணவோ இல்லை: ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.

நல்லார் பொய்யுரையை வெறுப்பர்: பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.

நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்: பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.

ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு: மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.

அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.

சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்: பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.

மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்: பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.

விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்: சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.

நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்: விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.

அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்: போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.

ஞானமுள்ளவரது அறிவுரை வாழ்வளிக்கும் ஊற்றாகும்: அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.

நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்: நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.

கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்: மூடர் தன் மடமையை விளம்பப்படுத்துவார்.

தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்: நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.

நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்: கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.

நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்: மூடர் தம் தீமையை வெறக்காதிருப்பதும் இதனாலேயே.

ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்: மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.

பாவிகளைத் தீங்கு பின்தொடரும்: கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.

நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்: பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.

தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்: ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.

பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்: மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்: பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.

நீதிமொழிகள் 13:1-25

சாலமோனின் நீதிமொழிகள் 14

ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்: அறிவிற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.

நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்: நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.

மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்: ஞானமுள்ளவருடைய சொற்களோ அவரைப் பாதுகாக்கும்.

உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை: வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.

வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்: பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.

ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்: ஆனால் அதை அடையான்: விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.

மூடனைவிட்டு விலகிச் செல்: அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?

விவோகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்: மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.

பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்: மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்: நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.

ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே: வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.

பொல்லாரின் குடி வேரோடழியும்: நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.

ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்: முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

நகைப்பிலும் துயரமுண்டு: மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.

உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்: நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.

பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்: விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.

ஞானமுள்ளவர் விழிப்புடையவர்: தீமையை விட்டு விலகுவர். முதியோடரோ மடத்துணிச்சலுள்ளவர்: எதிலும் பாய்வார்.

எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்: விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.

பேதையர் அறியாமையுடையோர்: விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.

தீயவர் நல்லார்முன் பணிவர்: பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.

ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்: செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.

அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்: ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.

தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.

கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்: வெறும் பேச்சினால் வருவது வறுமையே.

ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி: மதிகேடருக்கு அவர்களது மடமைதான் பூமாலை.

உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்: பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்: அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாயிருப்பார்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்: சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.

மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்: குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.

பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.

மன அமைதி உடல் நலம் தரும்: சின வெறியோ எலும்புறுக்கியாகும்.

ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்: வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.

பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சியுறுவார்: கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.

விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்: மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.

நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்: பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.

கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்: தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.

நீதிமொழிகள் 14:1-35

சாலமோனின் நீதிமொழிகள் 15

கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்: கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.

ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்: மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.

ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்: நல்லாரையும் பார்க்கும், பொல்லாரையும் பார்க்கும்.

சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது: வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.

தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்: கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.

நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்: பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.

ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது: மதிகேடரின் உள்ளம் அத்தகையதல்ல.

பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்: நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.

பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு: நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.

நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்: கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.

பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?

ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்புவார்: ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்:

அகமகிழ்ச்சியால் முகம் மலரும்: மனத்துயரால் உள்ளம் உடையும்.

விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்: மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.

ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே: மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.

பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.

பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.

எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்: பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.

சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே: சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.

ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்: அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.

மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சியடைகின்றான்: மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான்.

எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்: பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.

தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்: காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.

விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல: அது வாழ்விற்கச் செல்லும் பாதையாகும்.

இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்: கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.

தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்: மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.

வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்: கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.

சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்: பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.

ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந்தொலையில் இருக்கிறார்: தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.

இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்: நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.

நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டிருப்பதை விரும்புவார்.

கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்: அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.

ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி: மேன்மை அடையத் தாழ்மையே வழி.

நீதிமொழிகள் 15:1-33

சாலமோனின் நீதிமொழிகள் 16

எண்ணங்களை மனிதர் எண்ணலாம்: ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.

மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்: ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.

உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை: அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.

ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு: பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.

இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்: அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்: இது உறுதி.

அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.

ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.

தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்: ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.

அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது: தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.

நிறைகோலும் துலாக்கோலும் ஆண்டவருக்கே உரியன: பையிலுள்ள எடைக்கற்களெல்லாம் அவரால் உண்டானவை.

தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்: ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.

நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்: நேரியவற்றசை சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.

அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது: ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.

அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்: அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.

பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்: வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.

நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்: தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புடனிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.

அழிவுக்கு முந்தியது அகந்தை: வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.

மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.

போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்: ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.

ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்: இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.

விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்: மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.

ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சே விவேகமுள்ளதாக்கும்: அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.

இன்சொற்கள் தேன்கூடு போன்றவை: மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.

ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்: முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது: உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.

பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்: எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.

கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்: புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.

வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.

கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்: வாயை மூடிக்கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.

நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி: அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.

வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்: நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.

மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்: ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.

நீதிமொழிகள் 16:1-33