மத்தேயு 15 & 16

வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் ' என்றார்.

இயேசு மறுமொழியாக, ' என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர் ' என்றார்.

வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா? வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.

ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது ' என்றார்.

மத்தேயு 15:11, 13-14, 17-20

இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் ' என்றார்.

மத்தேயு 16:24-28