எசாயா 5, 8, 42 & 43

பொய்ம்மை என்னும் கயிறுகளால் தீச்செயலைக் கட்டி இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப் பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு ஐயோ கேடு! நாங்கள் பார்க்கும்படி அவர் விரைவாய் வந்து, தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்: நாங்கள் அறியும்படி, இஸ்ரயேலின் தூயவர் தம் நோக்கத்தை வெளிப்படுத்தி அதை நிறைவேற்றட்டும் என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!

தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு! தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு!

திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்: குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்:

ஆதலால், நெருப்புத் தணல் வைக்கோலை எரித்துச் சாம்பலாக்குவது போல, காய்ந்த புல் தீக்கிரையாக்கித் தீய்ந்து போவது போல, அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்: அவர்கள் வழிமரபு துரும்புபோல் பறந்து போகும்: ஏனெனில் அவர்கள், படைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்: இஸ்ரயேலின் தூயவரது வாக்கை வெறுத்துத் தள்ளினார்கள்.

எசாயா 5:18-24

மாயவித்தைக்காரரையும், முணுமுணுத்து மந்திரங்களை ஓதிக் குறி சொல்வோரையும் அணுகிக் குறி கேளுங்கள் என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ? உயிருள்ளோருக்காகச் செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை? என்பார்கள். இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள் என்று அவர்கள் சொல்லாததனால் அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி.

எசாயா 8:19-20

சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும், படிமங்களிடம், நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்போரும் இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.

எசாயா 42:17

நீங்கள் என் சாட்சிகள் என்கிறார் ஆண்டவர்: நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே: என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்: நானே அவர் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்: எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை: எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.

நான், ஆம், நானே ஆண்டவர்: என்னையன்றி வேறு மீட்பர் இல்லை. அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே: உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று: நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்! நானே இறைவன்: எந்நாளும் இருப்பவரும் நானே: என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை: நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?

எசாயா 43:10-13