லேவியர் 19

களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்: வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது.

காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள்.

பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்! என் கட்டளைகளைக் கடைப்பிடி. உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே. உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே!

எந்த இறைச்சியையும் குருதியோடு உண்ண வேண்டாம்: குறி பார்க்க வேண்டாம்: நாள் பார்க்க வேண்டாம். தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம். செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்: பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்: நானே ஆண்டவர்!

நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே! ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்தைக் குறித்து அச்சம் கொள்ளுங்கள்: நானே ஆண்டவர்!

பில்லி சூனியம் பார்க்க வேண்டாம்: குறிகாரரை அணுகவேண்டாம்: அவர்களைத் தேடி அவர்களால் தீட்டாக வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட: உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்: நானே ஆண்டவர்!

லேவியர் 19:11-19, 26-32