சீராக் 20

தவறான நேரத்தில் கண்டிப்போரும் உண்டு: அமைதி காத்து ஞானி ஆனோரும் உண்டு. உள்ளே புகைந்து கொண்டிருப்பதைவிடக் கண்டிப்பது மேல். தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்வோர் தோல்வியிலிருந்து விடுவிக்கப்பெறுவர். கட்டாயத்தின்பேரில் ஒருவர் நீதியானதைச் செய்வது ஓர் அண்ணகன் ஒரு சிறுமியை கற்பழிக்க விரும்புவதற்கு இணையாகும்.

அமைதி காப்போர் ஞானியராக எண்ணப்படுகின்றனர்: வாயாடிகள் வெறுப்புக்கு ஆளாகின்றனர். எதைப்பேசுவது எனத் தெரியாமல் அமைதியாய் இருப்போரும் உண்டு: எப்போது பேசுவது எனத் தெரிந்தவராய் அமைதி காப்போரும் உண்டு. ஞானியர் தக்க நேரம் வரும் வரை அமைதி காப்பர்: வீண் பெருமை பேசும் மூடர் சரியான நேரத்தைத் தவறவிடுவர். மட்டு மீறிப் பேசுவோர் அருவருப்புக்கு ஆளாவார்: அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் வெறுக்கப்படுவர்.

தீமை நன்மையாக மாறுவதும் உண்டு: நல்வாய்ப்பு இழப்புக்கு இட்டுச் செல்வதும் உண்டு. உனக்குப் பயன் அளிக்காத கொடையும் உண்டு: இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கொடைகளும் உண்டு. பெருமை நாடி வீழ்ச்சி அடைந்தோர் உண்டு: தாழ்நிலையிலிருந்து உயர்நிலை அடைந்தோரும் உண்டு.

நிறைந்த பொருளைக் குறைந்த விலைக்கு வாங்கக் கருதி ஏழு மடங்கு மிகுதியாகக் கொடுத்து வாங்குவோரும் உண்டு. ஞானிகள் தங்கள் சொற்களால் தங்களை அன்புக்குரியோர் ஆக்கிக்கொள்ளுகின்றார்கள்: மூடரின் இச்சகம் வீணாகின்றது.

அறிவிலிகளின் கொடை உனக்கு ஒன்றுக்கும் உதவாது: அது அவர்களுக்கே பன்மடங்கு பெரிதாய்த் தெரிகிறது. அவர்கள் குறைவாகக் கொடுப்பார்கள்: நிறைய திட்டுவார்கள். முரசறைவோர் போன்று அதுபற்றிப் பேசுவார்கள். இன்று கடன் கொடுப்பர்: நாளையே அதைத் திருப்பிக்கேட்பர். இத்தகையோர் வெறுப்புக்கு உரியோர்.

நாவினில் தடுமாறுவதைவிட நடைபாதையில் தடுமாறி விழுவதுமேல்: தீயவர்களின் வீழ்ச்சி திடீரென்று ஏற்படும்.

வறுமையினால் பாவம் செய்வதினின்று தடுக்கப்படுவோர் உண்டு: அவர்கள் மனவுறுத்தலின்றி ஓய்வு கொள்வார்கள்.

வெட்கம் தாங்காமல் சிலர் தங்கள் நண்பர்களுக்கு உறுதிமொழி வழங்குகின்றனர்: காரணமின்றி அவர்களைப் பகைவர் ஆக்கிக்கொள்கின்றனர்.

பொய் பேசுதல் மனிதருக்கு அருவருக்கத்தக்க கறை ஆகும்: அறிவற்றோரின் வாயிலிருந்து அது ஓயாது வெளிப்படும். பொய் சொல்லும் பழக்கம் கொண்டவரை விடத் திருடன் மேலானவன்: இருவருமே அழிவை உரிமையாக்கிக்கொள்வர். பொய்யரின் நடத்தை இகழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்: அவர்களின் வெட்கக்கேடு அவர்களோடு எப்போதும் இருக்கும்.

சலுகைகளும் அன்பளிப்புகளும் ஞானிகளின் கண்களைக் குருடாக்கும்: கடிவாளமிட்ட வாய்போல் அவை கண்டனங்களைத் தவிர்த்துவிடும். மறைந்து கிடக்கும் ஞானம், கண்ணுக்குத் தெரியாத புதையல் ஆகியவற்றால் கிடைக்கும் பயன் என்ன? தங்கள் ஞானத்தை மறைத்து வைக்கும் மனிதரைவிடத் தங்களது மடமையை மூடி மறைக்கும் மானிடர் மேலானோர்.

சீராக் 20:1-15, 18, 21, 23-26, 29-31