நீதிமொழிகள் 24 & 30

ஞானிகளின் வேறு சில முதுமொழிகள்: நீதித்தீர்ப்பு வழங்கும்போது ஓர வஞ்சனை காட்டுவது நேரியதல்ல. குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்: உலகனைத்தும் வெறுக்கும். ஆனால், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் நீதிபதிக்கு நலமுண்டாகும்: நற்பேறும் கிடைக்கும்.

நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார். வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்: வயலை உழுது பண்படுத்து: பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.

தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே: உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே. அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்: அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன் என்று சொல்லாதே.

சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்: அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன். அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது: நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது: அதன் சுவர் இடிந்து கிடந்தது.

அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்: அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே: இன்னும் சிறிது நேரம் தூங்கு: இன்னும் சிறிது நேரம் உறங்கு: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு. அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்: ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.

நீதிமொழிகள் 24:23-34

கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக்கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது: தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார். அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே: கூட்டினால் நீ பொய்யனாவாய்: அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.

தகப்பனை ஏளனம் செய்யும் கண்களையும் வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.

நீதிமொழிகள் 30:5-6, 17