சீராக் 38 & 39

ஓய்வு நேரம் மறைநூல் அறிஞரின் ஞானத்தை வளர்க்க வாய்ப்பு அளிக்கிறது. குறைவான செயல்பாடு உள்ளோரே ஞானத்தில் வளர்வர். கலப்பையைப் பிடிக்கிறவர், தாற்றுக்கோலின் பிடியில் பெருமை கொள்கிறவர், எருதுகளை ஓட்டி அவற்றின் வேலைகளில் மூழ்கியிருக்கிறவர், இளங்காளைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறவர் எவ்வாறு ஞானத்தில் வளர்வர்?

இவர்கள் எல்லாரும் தங்கள் கைகளையே நம்பியுள்ளனர்: ஒவ்வொருவரும் தம் தொழிலில் திறமை கொண்டுள்ளனர். இவர்களின்றி நகர்கள் குடியிருப்பாரற்றுக் கிடக்கும்: அவற்றில் எவரும் தங்கி வாழ்வதில்லை: உலாவுவதுமில்லை.

ஆயினும் இவர்கள் மக்கள் மன்றத்தில் தேடப்படுவதில்லை: மக்கள் சபையில் முதலிடம் பெறுவதில்லை. நடுவரின் இருக்கையில் அமரமாட்டார்கள்: நீதி மன்றத்தின் தீர்ப்புகளைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். நற்பயிற்சியையோ தீர்ப்பையோ அவர்களால் விளக்கிக்கூற இயலாது: உவமைகளைக்கொண்டு பேசுவதைக் காண முடியாது. ஆனால், படைப்பின் அமைப்பைப் பேணிக் காப்பாற்றுகிறார்கள்: அவர்களது வேண்டுதல் அவர்களது தொழிலைப்பற்றியே இருக்கும்.

சீராக் 38:24-25, 31-34

ஆனால் உன்னத இறைவனின் திருச்சட்டத்தைப் படிப்பதில் மனத்தைச் செலுத்துவோர் தங்கள் முன்னோர் எல்லாருடைய ஞானத்தையும் தேடுவர்: இறைவாக்குகளைப் படிப்பதில் ஈடுபட்டிருப்பர். பேர்பெற்றவர்களின் உரைகளைக் காப்பாற்றுவர்: உவமைகளின் நுட்பங்களை ஊடுருவிக் காண்பர்.

பழமொழிகளின் உட்பொருளைத் தேடுவர்: உவமைகளில் பொதிந்துள்ள புதிர்களை எளிதில் புரிந்துகொள்வர். பெரியோர்கள் நடுவே பணியில் அமர்வர்: ஆள்வோர் முன்னிலையில் தோன்றுவர்: அயல்நாடுகளில் பயணம் செய்வர்: மனிதரிடம் உள்ள நன்மை தீமைகளை ஆய்ந்தறிவர். வைகறையில் துயிலெழுவர்: தங்களைப் படைத்த ஆண்டவரிடம் தங்கள் உள்ளத்தைக் கையளிப்பர்: உன்னத இறைவன் திருமுன் மன்றாடுவர்: வாய் திறந்து வேண்டுவர்: தங்கள் பாவங்களுக்காகக் கெஞ்சி மன்றாடுவர்.

மாண்புமிகு ஆண்டவர் விரும்பினால், அவர்கள் அறிவுக்கூர்மையால் நிரப்பப்படுவார்கள்: தங்கள் ஞானத்தின் மொழிகளைப் பொழிவார்கள்: தங்கள் வேண்டுதலில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவார்கள். தங்கள் அறிவுரையையும் அறிவாற்றலையும் நேரிய வழியில் செலுத்துவார்கள்: ஆண்டவருடைய மறைபொருள்களைச் சிந்தித்துப் பார்ப்பார்கள். தாங்கள் கற்றறிந்த நற்பயிற்சியை விளக்கிக் காட்டுவார்கள்: ஆண்டவருடைய உடன்படிக்கையின் திருச்சட்டத்தில் பெருமை கொள்வார்கள்.

பலர் அவர்களுடைய அறிவுக் கூர்மையைப் பாராட்டுவர்: அவர்களது புகழ் ஒரு நாளும் நினைவிலிருந்து அகலாது: அவர்களுடைய நினைவு மறையாது: தலைமுறை தலைமுறைக்கும் அவர்களது பெயர் வாழும். நாடுகள் அவர்களது ஞானத்தை எடுத்துரைக்கும். மக்கள் சபையும் அவர்களது புகழ்ச்சியை அறிவிக்கும். அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தால், ஓராயிரம் பெயர்களைவிடப் புகழ்மிக்க பெயரை விட்டுச்செல்வார்கள்: இறந்தாலும் அப்பெயரே அவர்களுக்குப் போதுமானது.

சீராக் 39:1-11