இணைச் சட்டம் 4, 5, 6, 23 & 24

நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள். ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள், தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.

மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார்.

இணைச் சட்டம் 4:16-19

தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.

கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

இணைச் சட்டம் 5:16-21

முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச் சட்டம் 6:5

இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே. வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே.

இணைச் சட்டம் 23:19-20

பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

இணைச் சட்டம் 24:16