சீராக் 23 & 24

குழந்தைகளே, நாவடக்கம்பற்றிக் கேளுங்கள்: நாவைக் காப்போர் எதிலும் சிக்கிக்கொள்ளமாட்டார்கள். பாவிகள் தங்கள் நாவினாலேயே அகப்பட்டுக்கொள்வார்கள்: வசை கூறுவோரும் செருக்குக்கொண்டோரும் அதனால் இடறிவிழுகின்றனர். ஆணையிட உன் நாவைப் பழக்கப்படுத்தாதே: தூய கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டே இராதே.

விசாரணைக்கு உள்ளாகி அடிக்கடி அடிபடும் அடிமையிடம் அதன் வடுக்கள் காணப்படாமல் போகா: எப்போதும் ஆணையிடுவோரும் கடவுளின் பெயரைப் பயன்படுத்துவோரும் பாவங்களினின்று கழுவப்படமாட்டார்கள். அடிக்கடி ஆணையிடுபவர்கள் தீநெறியில் ஊறியவர்கள்: இறைத் தண்டனை அவர்களது வீட்டை விட்டு அகலாது. அவர்கள் தவறாக ஆணையிட்டால் பாவம் அவர்கள் மீதே இருக்கும்: தங்கள் ஆணையைப் புறக்கணித்தால் அவர்களது பாவம் இரு மடங்காகும். வீணாக ஆணையிடுவோர் பாவத்தினின்று விடுபடார்: அவர்களது வீடு பேரிடரால் நிரப்பப்படும்.

பெரியோர்கள் நடுவே நீ அமர்ந்திருக்கும்போது உன் தந்தை தாயை நினைவில்கொள். இல்லையேல், அவர்கள் முன்னிலையில் உன்னையே மறப்பாய்: உன் தீய பழக்கத்தால் அறிவிலிபோன்று நடந்து கொள்வாய்: நீ பிறவாமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் என விரும்புவாய்: உன் பிறந்த நாளையும் சபிப்பாய்.

கொழுந்துவிட்டு எரியும் காமவெறி கொண்டோர்: அவர்களது காமவெறி எரிந்து அடங்கினாலன்றி அணையாது. தம் உறவினர்களோடு முறையற்ற உறவு கொள்வோர்: அந்த ஆசை அடங்கும்வரை தீநெறியை அவர்கள் விடமாட்டார்கள். தகாத உறவு கொள்வோருக்கு எல்லா உணவும் இனியதே: இறக்கும்வரை அவர்கள் தளர்ந்து போக மாட்டார்கள்.

பிறர்மனை நாடுவோர்: என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவாகள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்? உன்னத இறைவன் என் பாவங்களை நினைத்துப்பாரார் எனத் தங்களுக்குள் சொல்லிக்கொள்வர்.

மனிதரின் கண்கள் கண்டுவிடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆண்டவரின் கண்கள் கதிரவனைவிடப் பத்தாயிரம் மடங்கு ஒளி படைத்தவை: அவை மாந்தரின் வழிகளையெல்லாம் காண்கின்றன: மறைந்திருப்பவற்றை அறிகின்றன என்பதை அவர்கள் அறியார்கள்.

காமுகர் நகர வீதிகளில் தண்டிக்கப்படுவர்: எதிர்பாராத இடத்தில் பிடிபடுவர். தன் கணவரை விட்டுவிலகி, வேறு ஆடவன்மூலம் அவருக்கு வழித்தோன்றலை உருவாக்கும் மனைவிக்கும் அவ்வாறே நேரும். முதலாவதாக, அவள் உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை: இரண்டாவதாக, தன் கணவருக்கு எதிராகக் குற்றம் புரிகிறாள்: மூன்றாவதாக, தன் கெட்ட நடத்தையால் விபசாரம் செய்கிறாள்: அடுத்தவர்மூலம் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள். அவள் சபைமுன் அழைத்து வரப்படுவாள்: அவளுடைய பிள்ளைகளும் விசாரணைக்கு ஆளாவர்.

அவளிள் பிள்ளைகள் வேரூன்றமாட்டார்கள்: அவளின் கிளைகளும் கனிகள் கொடா. அவள் சாபத்துக்குரிய நினைவை விட்டுச்செல்வாள்: அவள் அடைந்த இழிவு ஒரு நாளும் அழியாது. ஆண்டவருக்கு அஞ்சுவதைவிட மேலானது எதுவுமில்லை என்றும், ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைவிட இனிமையானது எதுவுமில்லை என்றும் அவளுக்குப்பின் வாழ்வோர் உணர்ந்துகொள்வர்.

சீராக் 23:7-11, 14, 17-19, 21-27

முதல் மனிதன் ஞானத்தை முழுமையாக அறியவில்லை: இறுதி மனிதனும் அதன் அழுத்தைக் கண்டானில்லை. ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை: அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை.

சீராக் 24:28-29