சீராக் 40, 41, 42, 43 & 51

பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் நகர்களைக் கட்டியெழுப்புவதும் ஒருவருடைய பெயரை நிலைக்கச் செய்கின்றன. மாசற்ற மனைவி இந்த இரண்டினும் மேலாக மதிக்கப்படுவாள். திராட்சை இரசமும் இன்னிசையும் இதயத்தை மகிழ்விக்கின்றன. ஞானத்தின்மேல் கொண்ட அன்பு இவ்விரண்டினும் மேலானது.

குழந்தாய், பிச்சையெடுத்து வாழாதே: பிச்சையெடுப்பதினும் சாவதே மேல். பிறரிடமிருந்து உணவை எதிர்பார்க்கிற மனிதரின் வாழ்க்கையை வாழ்க்கை எனச் சொல்லமுடியாது: பிறருடைய உணவால் ஒருவர் தம் வாழ்வை மாசுபடுத்துகிறார்: அறிவாற்றல் படைத்தோரும் நற்பயிற்சி பெற்றோரும் இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வர். பிச்சையெடுத்தல் வெட்கம் இல்லாதவரின் வாயில் இனிக்கும்: ஆனால், அது வயிற்றில் நெருப்பாய்ப் பற்றியெரியும்.

சீராக் 40:19-20, 28-30

இறப்பின் தீர்ப்புக்கு அஞ்சாதே! உனக்குமுன் இருந்தவர்களையும் உனக்குப்பின் வரப்போகிறவர்களையும் எண்ணிப்பார். இந்தத் தீர்ப்பை எல்லா மனிதருக்கும் ஆண்டவர் விதித்துள்ளார். பின்பு ஏன் உன்னத இறைவனின் விருப்பத்தை ஏற்க மறக்கிறாய்? நீ வாழ்ந்தது பத்து ஆண்டா, நூறு ஆண்டா, ஆயிரம் ஆண்டா என்பதுபற்றிப் பாதாளத்தில் கேள்வி எழாது.

உன் பெயரைப்பற்றி அக்கறை கொள்: ஆயிரம் பெரிய பொற் புதையல்களை விட உனக்கு அது நிலைத்து நிற்கும். நல்வாழ்க்கை சில நாள்களே நீடிக்கும்: நற்பெயர் என்றென்றும் நிலைக்கும்.

சீராக் 41:3-4, 12-13

அடக்கமற்ற மகள்மேல் கண்ணும் கருத்துமாய் இரு: இல்லையேல், பகைவரின் நகைப்புக்கும் நகரின் ஏச்சுக்கும் மக்களின் பேச்சுக்கும் அவள் உன்னை ஆளாக்குவாள்: நகர் மன்றத்தில் உன்னை வெட்கத்திற்கு உட்படுத்துவாள்.

அழகுக்காக எந்த மனிதரையும் நோக்காதே: பெண்களின் நடுவில் அமராதே. ஆடையிலிருந்து அந்துப்பூச்சி தோன்றுகிறது: பெண்ணிடமிருந்தே பெண்ணின் ஒழுக்கக்கேடு வருகிறது. பெண்ணே வெட்கத்தையும் இழிவையும் கொணர்கிறாள். இத்தகைய பெண் செய்யும் நன்மையை விட ஆண் செய்யும் தீமை பரவாயில்லை.

சீராக் 42:11-14

ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்: உங்களால் முடியும் அளவிற்கு அவரை உயர்த்துங்கள். ஏனெனில் அவர் அதனினும் மேலானவர். உங்கள் வலிமையெல்லாம் கூட்டி அவரை உயர்த்துங்கள்: சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் போதிய அளவு அவரைப் புகழ முடியாது.

ஆண்டவரைக் கண்டவர் யார்? அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் யார்? அவர் உள்ளவாறே அவரைப் புகழ்ந்தேத்துபவர் யார்? இவற்றினும் பெரியன பல மறைந்திருக்கின்றன: அவருடைய படைப்புகளில் சிலவற்றையே நாம் கண்டுள்ளோம். ஆண்டவரே அனைத்தையும் படைத்துள்ளார்: இறைப்பற்றுள்ளோருக்கு ஞானத்தை அருளியுள்ளார்.

சீராக் 43:30-33

ஆண்டவரின் இரக்கத்தில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்வதாக: அவரைப் புகழ்வதில் என்றும் நாணம் கொள்ளாதிருப்பீர்களாக. குறித்த காலத்திற்குமுன்பே உங்கள் பணிகளைச் செய்துமுடியுங்கள். அவ்வாறாயின் குறித்த காலத்தில் கடவுள் உங்களுக்குப் பரிசு வழங்குவார்.

சீராக் 51:29-30