விடுதலைப் பயணம் 22, 23 & 31

சூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே. விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும். ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும்.

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.

விடுதலைப் பயணம் 22:18-20, 22-23, 25

பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம். கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்! எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.

உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு. உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.

உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே. தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன். கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.

விடுதலைப் பயணம் 23:1-8

ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய சாபாத்து . ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

விடுதலைப் பயணம் 31:14-15