நீதிமொழிகள் 1, 2 & 3

பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்: நீ அவர்களுடன் போக இணங்காதே. அவர்கள் என்னைப் பார்த்து, எங்களோடு வா: பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்: யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்: பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்: படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம். எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்: கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம். நீ எங்களோடு சேர்ந்துகொள்: எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே: அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே. அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன: இரத்தம் சிந்த விரைகின்றன. பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள். அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்: அவர்கள் அளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும். தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே: அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.

நீதிமொழிகள் 1:10-19

ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும். அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்: தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள். அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது: அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன. அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை: வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை.

நீதிமொழிகள் 2:16-19

உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே. அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, 'போய் வா, நாளைக்குத் தருகிறேன்' என்று சொல்லாதே. அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே: அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?

ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே. வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே: அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே. ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்: நேர்மையாளரோடு அவா உறவுகொள்கின்றார். பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்: அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.

செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்: ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்: அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

நீதிமொழிகள் 3:27-35