சீராக் 21 & 22

குழந்தாய், பாவம் செய்துவிட்டாயா? இனிமேல் செய்யாதே: உன் பழைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேள். பாம்பைக் கண்டு ஓடுவதைப்போலப் பாவத்தைவிட்டு ஓடிவிடு: நீ பாவத்தின் அருகில் சென்றால் அது உன்னைக் கடிக்கும்: அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள் போன்றவை: அவை மனிதரின் உயிரைப் போக்கி விடும்.

நெறிகேடுகள் எல்லாமே இருமுனைக் கூர்வாள் போன்றவை: அதன் காயங்கள் ஆறமாட்டா.

நெறிகெட்டோரின் கூட்டம் சணல் குப்பை போன்றது: கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவர்களின் முடிவு. பாவிகளின் பாதை வழவழுப்பான கற்களால் பாவப்பட்டுள்ளது: அதன் முடிவில் கீழுலகின் வாயில் உள்ளது.

மூடரின் உள்ளம் ஓட்டைக் கலன் போன்றது: அதில் எவ்வகை அறிவும் தங்கி நிற்காது.

மூடர்கள் சிரிக்கும்போது உரத்த குரல் எழுப்புவர்: அறிவில் சிறந்தோர் அமைதியாகப் புன்னகைப்பர்.

மூடர்களின் கால்கள் மற்றவர்களின் வீட்டுக்குள் விரைகின்றன: பட்டறிவு பெற்றவர்களின் கால்களோ நுழையத் தயங்குகின்றன. அறிவிலிகள் கதவு வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பார்கள்: நற்பயிற்சி பெற்றோர் வெளியே காத்திருப்பர். நற்பயிற்சி பெறாதோர் கதவு அருகே நின்று ஒற்றுக் கேட்பர்: அறிவுத்திறன் வாய்ந்தோர் அதை இகழ்ச்சியாகக் கொள்வர்.

அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர்: நுண்ணறிவு கொண்டோர் சொற்களை அளந்து பேசுவர். அறிவிலார் சிந்திக்குமுன் பேசுவர்: அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்.

சீராக் 21:1-3, 9-10, 14, 20, 22-26

சோம்பேறிகள் மாசுபடிந்த கல் போன்றவர்கள்: அவர்களது இழிவு கண்டு எல்லோரும் எள்ளி நகையாடுவர். சோம்பேறிகள் குப்பைமேட்டுக்கு ஒப்பானவர்கள்: அதைத் தொடுவோர் அனைவரும் கையை உதறித் தட்டிவிடுவர்.

நற்பயிற்சி பெறாத மகனைப் பெற்ற தந்தை இகழ்ச்சி அடைவார்: அத்தகைய மகளோ அவருக்கு இழிவைக் கொணர்வாள். அறிவுத்திறன் கொண்ட மகள் கணவரை அடைவாள்: இழிவாக நடப்பவள் தன் தந்தைக்கு வருத்தம் ஏற்படுத்துவாள். நாணமற்ற மகள் தன் தந்தைக்கும் கணவருக்கும் இகழ்ச்சியைக் கொணர்வாள்: அவ்விருவரும் அவளை இகழ்வர்.

நேரத்திற்குப் பொருந்தாத பேச்சு புலம்பவேண்டிய நேரத்தில் இன்னிசை எழுப்புவதைப் போன்றது: கண்டிப்பும் நற்பயிற்சியும் எக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்கும். (நல்வாழ்க்கை வாழப் பயிற்றவிக்கப் பெற்ற மக்கள் தங்கள் பெற்றோரின் இழிபிறப்பை மறைத்துவிடுகிறார்கள். ஒழுக்கத்தில் வளர்க்கப்படாமல் இறுமாப்பும் பிடிவாதமும் கொண்ட மக்கள் தங்களின் குலப்பெருமைக்கு அவமானம் கொணர்வார்கள்.)

மூடருக்குக் கல்வியறிவு புகட்டுவோர் உடைந்துவிட்ட பானை ஓடுகளை ஒட்டுவோருக்கு ஒப்பாவர்: ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போரைத் தட்டி எழுப்புவோர் போலாவர். மூடரோடு பேசுவோர் தூக்கக்கலக்கத்தில் உள்ளவரோடு பேசுவோருக'கு ஒப்பாவர்: பேச்சின் முடிவை, அது என்ன? என மூடர் கேட்பர்.

இறந்தோருக்காக அழு: ஒளி அவர்களைவிட்டு மறைந்து விட்டது. மூடருக்காக அழு: அறிவுக்கூர்மை அவர்களை விட்டு அகன்றுவிட்டது. இறந்தோருக்காக அமைதியாக அழு: அவர்கள் அமைதியில் துயில் கொள்கிறார்கள்.மூடரின் வாழ்வு சாவைவிடக் கொடிது.

இறந்தோருக்காக ஏழு நாள் துயரம் கொண்டாடப்படும்: மூடருக்காகவும் இறைப்பற்றில்லாதோருக்காகவும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துயரம் கொண்டாடப்படும்.

மதி கெட்டோரைப் பொறுத்துக் கொள்வதைவிட மணல், உப்பு, இரும்புத் துண்டு ஆகியவற்றைச் சுமப்பது எளிது.

சீராக் 22:1-12, 15