சபை உரையாளர் 10, 11 & 12

கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல, சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும். தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்: தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும்.

மூடர் தெருவில் நடந்தாலே போதும்: அவரது மடமை வெளியாகிவிடும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார். மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால், வேலையை விட்டு விடாதே. நீ அடக்கமாயிருந்தால், பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.

சபை உரையாளர் 10:1-4

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்: கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.

மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்: குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.

சபை உரையாளர் 11:9-10

ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும்,

வீட்டுக்காவலர் நடுக்கங்கொள், வலியோர் தளர்வுறு முன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்துபோகுமுன்னும்,

தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக்கொள், சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்கு முன்னும், வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை: நூல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு. இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்: கடவுளுக்கு அஞ்சி நட: அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.

சபை உரையாளர் 12:1-7, 12-13