நீதிமொழிகள் 6

சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்: அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்: அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை. எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்: அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.

சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்? இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள். வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்: ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.

ஆண்டவர் வெறுக்கும் ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது. அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை, சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால், பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

கட்டளை என்பது ஒரு விளக்கு: அறிவுரை என்பது ஒளி: கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி. அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும். உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே: அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே. விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்: ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.

ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா? ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா? பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே: அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான். அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்: அவனது இழிவு ஒருபோதும் மறையாது. ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்: பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்: சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்: எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.

நீதிமொழிகள் 6:6-11, 16-19, 23-29, 32-35