சீராக் 25

என் மனத்திற்குப் பிடித்தவை மூன்று: அவை ஆண்டவர் முன்னும் மனிதர்முன்னும் அழுகுள்ளவை. அவை: உடன்பிறப்புகளிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு, தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர், மூன்று வகை மனிதரை நான் வெறுக்கிறேன். அவர்களின் வாழ்வை நான் பெரிதும் அருவருக்கிறேன். அவர்கள்: இறுமாப்புக் கொண்ட ஏழைகள், பொய் சொல்லும் செல்வர், கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும் அறிவற்ற முதியவர்.

வருத்தங்களிலெல்லாம் கொடிது மனவருத்தமே: தீமைகளிலெல்லாம் கொடிது பெண்ணிடமிருந்து வரும் தீமையே. துன்பங்களிலெல்லம் கொடிது நம்மை வெறுப்பவரிடமிருந்து வரும் துன்பமே: பழிகளிலெல்லாம் கொடிது நம் பகைவரிடமிருந்து வரும் பழியே. தலைகளிலெல்லாம் கொடிது பாம்பின் தலையே: சீற்றத்திலெல்லாம் கொடிது பகைவரின் சீற்றமே.

கெட்ட மனைவியுடன் வாழ்வதைவிடச் சிங்கத்துடனும் அரக்கப் பாம்புடனும் வாழ்வது மேல். பெண்ணின் கெட்ட நடத்தை அவளது தோற்றத்தை மாற்றுகிறது: கரடியின் முகத்தைப்போன்று அவளது முகத்தை வேறுபடுத்துகிறது. அவளுடைய கணவர் அடுத்தவர்களுடன் அமரும்போது அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கடுமையாகப் பெருமூச்சுவிடுவார். பெண்ணின் தீச்செயலுக்குமுன் மற்ற எல்லாமே சிறிது. பாவிகளுடைய கேட்டுக்கு அவள் ஆளாகட்டும்.

மணல்மேட்டில் முதியவரால் ஏறமுடியாது: வாயாடி மனைவியுடன் அமைதியான கணவர் வாழ முடியாது. மங்கையரின் அழகினில் மயங்கி விடாதே: பெண்கள்மீது இச்சை கொள்ளாதே. தன் மனைவியின் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் கணவர் அவளுடைய சினத்துக்கும் செருக்குக்கும் ஆளாகிப் பெரும் இகழ்ச்சி அடைவார். சோர்வுற்ற மனம், வாட்டமான முகம், உடைந்த உள்ளம் ஆகியவை கெட்ட மனைவியினால் வருகின்றன. தன் கணவரை மகிழ்விக்காத மனைவி நலிவுற்ற கைகளையும் வலிமையற்ற முழங்கால்களையும் போன்றவள்.

பெண்ணாலேயே பாவம் தோன்றியது. அவளை முன்னிட்டே நாம் அனைவரும் இறக்கிறோம். தொட்டியிலிருந்து தண்ணீர் ஒழுகியோடவிடாதே: கெட்ட பெண்ணை அவளுடைய விருப்பம்போலப் பேசவிடாதே. உன் விருப்பப்படி உன் மனைவி நடக்கவில்லையெனில் உன்னிடமிருந்து அவளை விலக்கிவை.

சீராக் 25:1-2, 13-26