முகவுரை

அன்பர்களே, இந்த திருவிவிலிய நன்னெறிகள் என்பதின் நோக்கம் இன்றைய விவிலிய வாசகர்களுக்கு திருவிவிலியத்தில் உள்ள நல்லக் கருத்துக்களையும் நல்லொழுக்க நெறிகளையும் முழுமையாக அறியச் செய்வதேயாகும்.

திருவிவிலியம் என்பது ஒரு வரலாற்று நூலோ அல்லது அறிவியல் நூலோ அல்ல. இது விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற இறைமக்களின் விசுவாச வாழ்வை உள்ளடக்கிய, பிரதிபலிக்கின்ற, விசுவாசத்தில் வாழ வழி காட்டுகின்ற நூலாகும்.

இவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல்காரணம் இறைவனே ஆவார். கடவுள் மனிதனிடம் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது; ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான்; ஆயினும் கடவுள் மனிதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.

இதை ஒரு நூல் என்பதை விட நூலகம் என்றே கூறிவிடலாம் ஏனென்றால் விவிலியம் என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல் தொகுப்பு. திருவிவிலியமானது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

பழைய ஏற்பாடு என்பது பல நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் உருவாக்கப்பட்ட பல நுல்களின் தொகுப்பாகும். இறைவனின் ஆவியால் தூண்டப்பட்டவர்கள் அவற்றை எழுதினார்கள். பழைய ஏற்பாடானது கடவுள் எவ்வாறு இஸ்ரேயல் மக்களை அன்பு செய்து வழி நடத்தி தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி மீட்பளித்தார் என்பதை விளக்கிக் கூறுகிறது. இறைவன் மனிதனுக்கு வாழ்வுகொடுத்துக் காப்பாற்றியதையும், இறைவனை விட்டு அலைந்து திரிந்து, தங்களையே இழந்தவர்களாய்த் தோல்வியடைந்தவர்களைப் பற்றியும் சாட்சியம் கூறுகிறது. மேலும் இதில் திருப்பாடல்கள், நீதிமொழிகள், ஞானாகமம், சீராக் போன்ற நூல்கள் நல்ல கருத்துக்களையும், நல்ல நெறிகளையும் எடுத்துரைப்பதாக விளங்குகிறது.

புதிய ஏற்பாடு என்பது இயேசு கிறிஸ்துவின் காலத்தையும் பின்னர் உள்ள காலக்கட்டத்தையும் எடுத்துரைக்கின்றது. ஒப்பற்ற தன்னிகரில்லாத முறையில் இறைவன் தம்மையே தம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படு்த்துகின்றார். இயேசுவின் போதனையில் சிறப்பான அம்சம் இறையரசின் செய்தியே. மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பல்வேறு போதனைகள், சிந்தனைகள், செயல்கள் மனிதருக்கு எவ்வாறு மீட்பைக் கொண்டு வந்தன என்பதையும் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. இதில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்ற சுவிசேசங்கள், இயேசு கிறிஸ்து தான் மெசியா என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன.

பத்துக் கட்டளைகள்

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.

மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.

உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.  ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.

கொலை செய்யாதே.

விபசாரம் செய்யாதே.

களவு செய்யாதே.

பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.

பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

விடுதலைப்பயணம் 20:1-17

விடுதலைப் பயணம் 15, 20 & 21

மேலும் அவர், ″உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்″ என்றார்.

விடுதலைப் பயணம் 15:26

என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.

மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.

கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

விடுதலைப் பயணம் 20:3-17

தம் தந்தையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

ஆனால் கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்: சூட்டுக்குச் சூடு: காயத்துக்கு காயம்: கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.

விடுதலைப் பயணம் 21:15, 17, 23-25

விடுதலைப் பயணம் 22, 23 & 31

சூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே. விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும். ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும்.

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.

விடுதலைப் பயணம் 22:18-20, 22-23, 25

பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம். கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்! எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.

உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு. உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.

உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே. தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன். கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.

விடுதலைப் பயணம் 23:1-8

ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய சாபாத்து . ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

விடுதலைப் பயணம் 31:14-15